Ibadah Spiritual Upliftment

இறுதிப் பத்தும் இஃதிகாபும்!

இறுதிப் பத்தும் இஃதிகாபும்!

மிதமிஞ்சிய உணவு, பானம், நித்திரை, உரையாடல்கள் முதலானவை மனிதனது உள்ளத்தின் ஆரோக்கியமான நிலையை இல்லாமலாக்கி அல்லாஹ்வை நோக்கி சென்றடையும் பாதையில் பல தடைக்கற்களை ஏற்படுத்தி விடுகின்றன. நோன்பும் அதனுடன் தொடர்புறும் வணக்க வழிபாடுகளும் உணவு, பானம், ஆசாபாசங்கள் ஆகியவற்றுக்கான  தேவையை உள்ளத்திலிருந்து அகற்றி அல்லாஹ்வை நெருங்க கூடிய வாய்ப்புக்களை உண்டு பண்ணுகின்றன. முஃமின்கள்  ஏனைய பதினொரு மாதங்களிலும் ஷைத்தானை  எதிர்த்து போராடுவதற்கான ஆன்மிக வலிமையைப் பெற்றுக்கொள்ள ரமழான் மாதத்தில் புரியும் கிரியைகள் துணை செய்கின்றன.

இஃதிகாப் என்றால் என்ன?

இஃதிகாஃப் எனும் வணக்கமானது சடவாத பொருட்களின் தேவைகளிலிருந்து உள்ளத்தை திசை திருப்பி உலகாயுத சிந்தனைகளில் இருந்து முற்றாக விலகி அல்லாஹ்வுக்காக மட்டும் தன் உள்ளத்தையும் உடலையும் அர்ப்பணித்து அவனுடைய சிந்தனையில் குறிப்பிட்ட சில நாட்களைக் கழிக்க துணை செய்கிறது. எனவே, இஃதிகாபின் போது ஒரு நோன்பாளிக்கு மனிதர்களுடனான தொடர்பை இயன்றவரை குறைத்து அல்லாஹ்வுடனான  தொடர்பை அதிகரித்து  தன்னை ஆன்மிக ரீதியாக  மேம்படுத்தி கொள்வதற்கு  வாய்ப்பு கிட்டுகிறது.

எனவே, இஃதிகாப் என்பது ஒருவர் தற்காலிகமாக உலகின் அனைத்து  விவகாரங்களிலிருந்தும்  தன்னை முழுமையாக விடுவித்து அல்லாஹ்வுடன் நெருக்கமான தொடர்பை, அவனை வணங்கி வழிபடுவதற்காக  மேற்கொள்ளும் ஒரு முன்னெடுப்பாகும்.

இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடுகின்றார்  அரேபியர்களின் மொழியில் இஃதிகாப் என்பது  அல்லாஹ்வை நெருங்கும் நோக்கத்துடன் பள்ளிவாசலில் எந்த நேரத்திலாவது தங்கியிருப்பதாகும். அது குறுகிய நேரமாகவோ பல நாட்களாகவோ இருக்கலாம். ஏனெனில், குர்ஆனோ சுன்னாவோ அதற்கு காலவரையறையை நிர்னயிக்கவில்லை.”(அல்முஹல்லா)

அஷ்ஷெய்க் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார். இஃதிகாப் என்பது அல்லாஹ்வை வனங்குவதற்காக பள்ளியில் தரிப்பதாகும். அது குறுகிய அல்லது  நீண்ட காலமாக இருக்கலாம். ஏனெனில்,  நான் அறிந்த வரை  ஒரு நாள் அல்லது  இரு நாட்கள்  அல்லது அதைவிட அதிகமான நாட்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும் எந்த அறிவிப்பும் இல்லை. ஒருவர் நேர்ச்சை மூலம் தன் மீது விதித்துக் கொள்ளாதவரை இந்த வணக்கமானது நஃபிலானதாகும். இது ஆண், பெண் இருபாலாருக்கும் பொருந்தும்.” (அல்மஜ்மஉல் ஃபதாவா)

இஃதிகாஃபும் இறைதூதரும்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எப்போதுமே இறை வழிபாட்டில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும் ரமழான் மாதத்தில் அன்னாருடைய ஆர்வம் இன்னும் அதிகமாகிவிடும். குறிப்பாக, ரமழானின் கடைசிப் பத்து நாட்களை முழுக்க முழுக்க இறை வணக்கத்திலேயே கழிப்பார்கள். பள்ளிவாசலில் அமர்ந்து நஃபில் தொழுகை, குர்ஆன் ஓதுதல், துஆ, திக்ர் முதலானவற்றில் ஈடுபட்டிருப்பார்கள்.

இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  ரமழானில் இறுதி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்து வந்தார்கள்.”  (அல் புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழான் மாதத்தில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு பிறகு  அவர்களின் துணைவியர் இஃதிகாப் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  பள்ளிவாசலில் இஃதிகாப் இருக்கும்போது  அவர்களை சந்திக்க அவர்களின் மனைவி ஸஃபியா பின்த் ஹுயை (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் வந்தார்கள். சிறிது நேரம்  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு திரும்ப ஆயத்தமானார்கள். அது இரவு நேரமாக இருந்தது. எனவே ஸஃபியா  (ரழியல்லாஹு அன்ஹா) வீட்டை சென்றடையும்வரை  அவர்களுடன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செல்லலானார்கள். (அல் புகாரி, முஸ்லிம்)

உலகத்தின் அழுத்தங்களில் இருந்து உள்ளத்தை விடுவித்து முழுக்க முழுக்க  அல்லாஹ்வுடனான தொடர்பில் ஈடுபட்டு ஆன்மிக வீச்சில் பேரின்பம் காண இஃதிகாப்  துணை செய்கிறது. இமாம் இப்னு கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) எழுதுகிறார். இந்த இலக்கை ஒருவர் நோன்பாளியாக இருக்கும்போது  மட்டுமே அடைந்துகொள்ள முடியும் என்பதால்தான் இஃதிகாப் ரமழானின் மிகச் சிறந்த நாட்களான  இறுதிப் பத்து நாட்களில்  நபிலாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் இஃதிகாபை  நோன்புடன் தொடர்புபடுத்தி மட்டுமே பேசியுள்ளான். அவ்வாறே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் நோன்பாளியாகவேயன்றி இஃதிகாப் இருந்ததில்லை.” (ஸாதுல் மஆத்)

எனவே, இஃதிகாபுக்கான ஒரு நிபந்தனை நோன்பாளியாக இருப்பதாகும். இந்த கருத்தையே இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கொண்டுள்ளார்.

இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார். மிகச் சிறந்த இஃதிகாப் நோன்புடன் அனுஷ்டிப்பதாகும். அதிலும் சிறந்தது ரமழான் மாதத்தில்  இருப்பதாகும். அதிலும் சிறந்நதது இறுதிப் பத்து நாட்களில் இருப்பதாகும்.” (அல்மஜ்மூஉ)

இஃதிகாப் இருக்கும் முறை

இன்னும் நீங்கள்  மஸ்ஜிதுகளில் இஃதிகாப் இருக்கும்போது அவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, அவற்றை நெருங்காதீர்கள்.” (2: 187)

இந்த வசனத்தில் நோன்பை பற்றி குறிப்பிட்ட பின்  இஃதிகாப் பற்றி  அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இதில் ஒருவர் நோன்பின்போதோ அல்லது ரமழான் மாதத்தின் இறுதியிலோ  இஃதிகாபில்  ஈடுபட வேண்டுமென வழிகாட்டுதலும் தூண்டுதலும் இருக்கிறது.

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) விளக்கியுள்ளார். இந்த வசனம் ரமழான் மாதத்திலோ அலல்து ரமழான் அல்லாத மற்ற நாட்களிலோ பள்ளிவாசலில் தங்கி இஃதிகாப் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் குறித்து அருளப்பட்டதாகும். இரவிலும் சரி, பகலிலும் சரி மனைவியரோடு தாம்பத்திய உறவு கொள்ள அவருக்கு அல்லாஹ் தடை விதித்துள்ளான். இஃதிகாபை நிறைவு செய்யும்வரை அவருக்கு தடை நீடிக்கும். அது அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.

மனைவியருடன் உறவு கொள்ளாதீர்கள்”  என்பதைக் குறிக்க இந்த வசனத்தில் அல்லாஹ் வலா துபாஷிரூஹுன்ன” என்று கூறியுள்ளான்.  அதன் வேர்ச்சொல் அல்முபாஷரா” என்பதாகும். அது தாம்பத்திய உறவையும் அதைத் தூண்டக்கூடிய முத்தமிடல், கட்டியணைத்தல் போன்றவறைக் குறிக்கும். இஃதிகாஃப் இருக்கும்போது இந்த செயல்கள் அனைத்தும் விலக்கப்பட்டதாகும்.

ஏதேனும் அவசிய தேவையை முன்னிட்டு தமது இல்லத்திற்கு செல்ல நேர்ந்தால் இயற்கை கடனை நிறைவேற்றல், உணவு உட்கொள்ளல் போன்ற தேவைகளை முடித்துக் கொள்கின்ற அளவுக்கு மேலாக அங்கு தங்குவதற்கு அவருக்கு அனுமதியில்லை.

அப்போது அவர் மனைவியை முத்தமிடவோ கட்டியணைக்கவோ கூடாது. தாம் மேற்கொண்டுள்ள  இஃதிகாஃப் வழிபாட்டைத் தவிர வேறெதிலும்  அவர் ஈடுபடவும் கூடாது.  நோயாளியை நலம் விசாரிக்க வெளியில் செல்லக்கூடாது. எனினும் தனது தேவையை முன்னிட்டு வெளியில் செல்லும்போது  வழியில் நோயாளியை சந்தித்தால் சீகம் விசாரித்துக் கொள்ளலாம்.

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறுகிறார். நான் பள்ளிவாசலில் இஃதிகாப் இருக்கும்போது இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் வருவேன்.  சில சமயம் வீட்டுக்குள் யாரேனும் உடல் நலமின்றி இருப்பர். அப்போது போகின்ற போக்கில் அப்படியே நலம் விசாரித்துக் கொள்வேன்.” (ஸஹீஹு முஸ்லிம்)

இப்னு குதாமா  (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடுகிறார்.ஒருவரின் தேவைகள் என்பது இயற்கை தேவைகளாகும். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் இத்தகைய தேவை இருக்கிறது. அவ்வாறே அவர்  உண்ணவும் பருகவும் வேண்டியுள்ளது. அவருக்கு உணவையோ பானத்தையோ கொண்டுவர முடியும்.  யாரும் இல்லையெனில், அவர் வெளியில் சென்று வர முடியும். அவர் அதிக நேரம் எடுக்காதவரை பள்ளிவாசலில்  செய்துகொள்ளமுடியாத தேவைகளுக்கு அவர் வெளியில் சென்று வருவதானது அவரது இஃதிகாபை பாழ்படுத்திவிடாது. (அல்முக்னீ)

அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார். சுகயீனம் காரணமாக வைத்தியரை சந்திக்க வேண்டியவர் அதற்காக வெளியேறிச் செல்ல முடியும். இல்லையெனில், அவர் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்க வேண்டும். (அல்ஜலஸாத் ரமழானிய்யா)

இஃதிகாப் இருக்கும்போது தம்பதியர் தமக்கிடையே ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்குவது குற்றமாகாது. ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறுகிறார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இஃதிகாப் இருக்கும்போது  வீட்டில் இருக்கும் என் பக்கம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையில் நான் அவர்களுக்கு தலை வாருவேன். இயற்கை தேவைகள் இருந்தாலன்றி அவர்கள் வீட்டுக்குள் வர மாட்டார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)

ரமழானின் இறுதிப் பத்து  இரவுகளில் இஃதிகாஃப் இருப்பதில்  ஸுன்னாவைப் பின்பற்ற விரும்புகிறவர் ரமழானின் 20ஆம் இரவு சூரியன் மறைவதற்கு முன்னால் பள்ளிவாசலுக்குள் நுழைய வேண்டும். மேலும் அவர்  பெருநாளைக்காக  சூரியன் மறைந்த பின்னர் பள்ளிவாயலிருந்து வெளியேற வேண்டும்” என்று இமாம் ஷாபிஃஈ (ரஹிமஹுல்லாஹ்) கூறியுள்ளார். நாளை பெருநாள் இருக்கும்போது  இன்றைய இரவு பள்ளியில் தங்குவதும் சிறந்ததாகும் என்று  இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ் ) குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் தங்களது வீடுகளில் இஃதிகாப் இருக்க முடியுமா? என்ற வினா அடிக்கடி எழுப்பப்படுகிறது. பெரும்பாலான அறிஞர்கள் இஃதிகாப் பற்றிய வழிமுறைகள் ஆண்-பெண் இருபாலாருக்கும் பொதுவானவை. எனவே, ஆண்களும் சரி பெண்களும் சரி பள்ளிவாசலில் மட்டுமே இருக்கமுடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.  அல்குர்ஆன்  தெளிவாக நீங்கள் மஸ்ஜித்களில் இஃதிகாப் இருக்கும்போது” (2: 187) என்றே சுட்டிக்காட்டியுள்ளது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அன்னாருடைய மனைவிமாரும்  தங்களது வீடுகள் மஸ்ஜிதுடன் இணைந்தே இருந்தபோதிலும் மஸ்ஜிதுக்குள் மட்டுமே இஃதிகாப் இருந்துள்ளனர். மஸ்ஜிதில் மாத்திரமே இஃதிகாப் இருக்க முடியும் என்பதற்கு  இமாம் அல்புகாரி மேற்கூறிய (2: 187) வசனத்தை  ஆதாரமாக காட்டியுள்ளார்.

மஸ்ஜித் அன்றி வேறு இடங்களில் இஃதிகாப் இருக்க முடியுமென்றால் மனைவியருடன் உடலுறவு கொள்வதற்கான  தடை உத்தரவு குறிப்பிடப் பட்டிருக்காது.  ஏனெனில், மனைவியருடன் உறவு கொள்வது  இஃதிகாபின்போது  தடைசெய்யப்பட்டுள்ளது என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்” என இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) விளக்கியுள்ளார்.

மேலும், இஃதிகாப் இருக்கும் மஸ்ஜித் ஜும்ஆ தொழுகை நடத்தப்படும் பள்ளிவாசலாக இருகக் வேண்டும் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *