General Knowledge Politics

ஈரானிய தேர்தல்: அதிகாரம் அதிபருக்கா? ஆன்மிக தலைவருக்கா?

ஈரானிய தேர்தல்: அதிகாரம் அதிபருக்கா? ஆன்மிக தலைவருக்கா?

ஸகிபவ்ஸ் (நளீமி), எம்.ஏ

விரிவுரையாளர்,

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை

கடந்த மே 19ஆம் திகதி இடம்பெற்ற ஈரானின் ஜனாதிபதித் தேர்தல்களில் கலாநிதி ஹசன் ரௌஹானி சுமார் 57 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆயதுல்லாஹ் ரஈஸி 37 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். சமீபத்திய வரலாற்றில் அதிக வாக்களிப்பு வீதத்தைக் கொண்ட தேர்தலாகவும் இது அமைந்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 73 வீதமானோர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்கித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலின் பின்பு ஈரானின் தேசிய, பிராந்தியக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுமா?  சீர்திருத்தவாதியாக தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஹசன் ரௌஹானியின் வெற்றியை கடும்போக்கு மதவாத அரசின் தலைவரான ஆன்மிகத் தலைவர் அலி கொமைனி எப்படி கையாளப் போகிறார்? மற்றும் ஈரானின் கடும்போக்கு அரசின் இராணுவத்தை விமர்சனம் செய்து ஆட்சிபீடமேறிய புதிய ஜனாதிபதியின் நகர்வுகளை இராணுவம் எப்படி மதிப்பீடு செய்யப் போகிறது? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆனால், அத்தகைய கேள்விகளுக்கான விடையைப் புரிந்து கொள்வதற்கு ஈரானின் தேர்தல் தத்துவத்தை புரிந்து கொள்வது அவசியமாகும்.

ஈரானிய மதவாத அரசும் தேர்தல் தத்துவமும்

உண்மையில், ஏனைய நாடுகளது தேர்தல்களை விட ஈரானியத் தேர்தல்கள் வித்தியாசமானவை. மட்டுமல்ல, ஈரானிய அரசிடம் தேர்தல்கள்” தொடர்பாக வித்தியாசமான தத்துவமே காணப்படுகிறது. பொதுவாக,  தேசத்தின் கொள்கைகளை, முன்னகர்வுகளை வடிவமைக்கும் செயற்திட்டத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்யும் செயன்முறையே தேர்தல்களாகும். ஆனால் தேசிய கொள்கைகளை, செயற்திட்டங்களை, நிதி ஒதுக்கீடுகளை மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் மூலதத்துவமாக தேர்தல்களை” ஈரானிய அரசு நோக்குவதில்லை. மாறாக, தேசத்தின் ஒட்டுமொத்த மனோநிலையை” (‡ச்ணாடிணிணச்டூ –ணிணிஞீ) மதிப்பீடு செய்வதற்கான கருவியாகவே ஈரானிய அரசு தேர்தல்களை பயன்படுத்துகின்றது. ஏனெனில், மக்களால் நிர்வகிக்கப்படும் அரசு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஈரானிய அரசை நோக்க முடியாது. மாறாக, அதனை இறைவனின் பிரதிநிதியின் பிரதிநிதியின் அரசு (விலாயதுல் பகீஹ்) என்றே அவர்கள் கருதுகிறார்கள். அதாவது, ஈரானின் அரச கட்டமைப்பின் உச்ச பதவியான ஆன்மிகத் தலைவர் பதவிக்கு ஒருவர் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், அவரது அதிகாரம் குறித்து பொது மக்கள் எவருக்கும் கேள்வி எழுப்ப முடியாது. அரசின் போக்கில், இலக்கில், கொள்கைகளில்  எந்த மாற்றம் செய்வதற்கும் ஈரானியப் பொது மக்களுக்கு அதிகாரம் இல்லை. இந்த வகையில், ஆன்மிகத் தலைவரின் இல்லம் மற்றும் அவரைப் பாதுகாக்கும் புரட்சிப் படை என்பவற்றை இறை அரசின் இரு சிறகுகள் என்றே ஈரானிய அரசு நோக்குகிறது. ஈரானிய அரசாங்கத்தின் சகல கொள்கைகளும் தீர்வுத் திட்டங்களும் மேற்கூறப்பட்ட  மதத் தலைமைபீடத்தில் அனுமதி பெறாத வரை செயற்படுத்த முடியாது. அதாவது, தேர்தல்களில் மக்கள் யாருக்கு, எதற்காக வாக்களித்தாலும் ஆன்மிகத் தலைவரின்” அனுமதியின்றி அதனை செயற்படுத்த முடியாது.

2013 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்

இந்த வகையில் தேர்தல்களை நடத்துவதினுடாக மக்கள் எந்த மனோநிலையில் இருக்கிறார்கள் என்ற இதயத் துடிப்பை அளந்து பார்ப்பதே அரசின் முதன்மை இலக்காகும். உதாரணமாக, 2013 ஆம் ஆண்டு தேர்தலில் ஹசன் ரௌஹானி முதல் முறையாக வெற்றி பெற்றார். சிரியப் புரட்சியும் அரபு வசந்தம் ஏற்படுத்திய அதிர்வுகளும் அரபுலகை ஸ்திரமற்ற நிலையை நோக்கி தள்ளி விட்டது. அதே நேரத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஸ்திரமற்ற அரபுலகில் ஸ்திரமான நண்பனொருவனின் தேவையும் எழுந்தது. புதிய மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் கேள்விக்கு தெஹ்ரானை நிரம்பலான முன்வைக்க ஆன்மிகத் தலைவரின் அரசு முடிவு செய்தது. அதேபோல், 2005-2013 வரையான அரசின் தீவிர கருத்துக்களும் மற்றும் சுலோகங்களும் ஏற்படுத்திய பொருளாதார ரீதியான பாதிப்புகளும் சிவில் சமூகத்தின் சுதந்திரத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அத்துமீறல்களும் சுழமைகளும் சமூக மட்டத்தில் ஆழமாக  உணரப்பட்டன. எனவே, மேற்குலகை நேர்மறையாகவும் உள்நாட்டில் சீர்திருத்த, சிவில் சுதந்திர முன்னெடுப்புகளுடனும்” தேர்தல் களத்தில் குதிக்க முடியுமான வேட்பாளர் ஒருவரின் மீதான தேவையை ஆன்மிகத் தலைவரின் அரசு புரிந்து கொண்டது. அந்த இடைவெளியை ஹசன் ரௌஹானியை வைத்து அரசு நிரப்பியது. குறிப்பாக, மக்களின் பொருளாதார மேம்பாட்டை ஈடுசெய்யக் கூடியவராகவும் அதற்கு பிரதான தடைக்கல்லாகவும் பொருளாதாரத் தடையின் மறைகரமாகவும் தொழிற்பட்ட அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவராகவும் அவர் இருக்க வேண்டும் என அரசு எதிர்பார்த்தது. அதனை அப்படியே நிறைவேற்றினார் ஹசன் ரௌஹானி.

ஆனால், உள்நாட்டில் சிவில் உரிமைகளினதும் பொருளாதார அபிவிருத்தியினதும் செம்மலாக காண்பிக்கப்பட்ட ஹசன் ரௌஹானியின் காலத்திலேயே ஈரானின் வெளிநாட்டுக் கொள்கை அதிகம் இராணுவமயப்பட்டது என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அணுவாயுத ஒப்பந்தத்திற்கு பகரமாக தெஹ்ரானின் பிராந்திய ஆதிக்கத்தையும் அது பலப்படுவதனையும் வொஷிங்டன் அங்கீகரித்தது என்பதே இதன் பொருளாகும்.  சுருக்கமாக, 2013-2017 வரை ஆன்மிகத் தலைவரின் அரசுக்கு எது தேவையோ அதனை ஹசன் ரௌஹானி முழுமையாக நிறைவேற்றிக் கொடுத்து விட்டார்.

அரசு தரப்பு வேட்பாளரும் ஆன்மிகத் தலைவரும்

இத்தனைக்கும் மத்தியில் ஈரானியத் தேர்தல்களில் நேரெதிர்த் தரப்பு போட்டியாளர்களை மதவாத அரசு முகாமை செய்யும் விதமும் வித்தியாசமானதாகும். அதாவது, எப்போதும் சீர்திருத்த சுலோகங்களுடன்  களமிறங்கும் வேட்பாளரை வெளிப்படையாக அரசு ஆதரிப்பதில்லை. 2013 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் ஹசன் ரௌஹானியை அரசு ஆதரிக்கவில்லை. மாறாக, அரசின் சார்பாக களமிறங்கிய சஈத் ஜலாலியையே” வெளிப்படையாக ஆதரித்தது. அப்படியென்றால், ஹசன் ரௌஹானியுடைய எதிர்த்தரப்பாகவும் ஆன்மிகத் தலைவரின் நேரடி ஆசிர்வாதத்திலும் போட்டியிடும் அடுத்த வேட்பாளரின் நிலை என்ன? என்பது ஈரானிய அரசின் தேர்தல்கள் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கான மற்றொரு முக்கியமான கேள்வியாகும். உண்மையில் ஈரானிய அரசு தனது அரசின் சார்பாக நேரடியாக ஒருவரை தேர்தலில் இறங்குமாறு கோருவது அவர் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலல்ல. மாறாக, பொதுத் தளத்தில் சுடான விவாதங்களை ஏற்படுத்துவதற்கும் நேரெதிரான விவாதங்களை சமூகத் தளத்தில் கட்டமைத்து தேர்தலில் மக்கள் பங்கேற்பினை அதிகரிக்கச் செய்வதற்குமாகும். ஈரானிய ஆன்மிகத் தலைவரது அரசின் சார்பாக களத்தில் குதிக்கும் வேட்பாளரது தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் கடும் தீவிரமானதாக அமையும்.

அதாவது, சிவில் சமூகத்தின் சுதந்திரத்தை தாக்கிப் பேசுவதாகவும் ஈரானிய மதவாத தேசத்திற்கு எதிரான மேற்குலக சதிக் கோட்பாட்டை அடிக்கடி பயன்படுத்துவதாகவும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அது அமையும். அதேபோல் சிவில் சமூக சுதந்திரம், மேற்குலகுடான நேர்மறை உரையாடல்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மையப்படுத்தியதாக எதிர்த்தரப்பு வேட்பாளரது தேர்தல்கள், பிரசாரக் கூட்டங்கள் வடிவமைக்கப்படும். இயல்பாகவே சீர்திருத்த சுலோகத்துடன் களமிறங்கும் வேட்பாளரை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற ஆவலை மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்துவதற்கான வியூகத்தையே இவ்வாறு ஆன்மிகத் தலைவரது அரசு வகுக்கிறது. விளைவாக, அதிகரித்த மக்கள் பங்கேற்பை தேர்தலில் நிறுவுவதற்கூடாக ஆன்மிகத் தலைவரது அரசின் சட்டபுர்வத்தன்மையை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கு அரசும் புரட்சிப் படை இராணுவமும் முயல்கின்றன.

இவ்வாறு, நேரடி ஆதரவாளர் வெற்றி பெறுவதும் சரி, எதிர்த் தரப்பு வெற்றி பெறுவதும் சரி, இரண்டும் ஆன்மிகத் தலைவர் தலைமையிலான அரசுக்கு வெற்றியே. ஏனெனில், ஒருவர் அரசின் அடிப்படை மூல தத்துவங்களை மற்றும்  சுலோகங்களைச் சுமந்து கொண்டு ஈரானிய மதவாத தேசத்தின் அடிப்படைகளை முன்வைத்து பேசுவார். மாற்றமுறும் பிராந்திய வலுச் சமநிலைகளின் ஒளியில் உடனடியாக ஆன்மிகத் தலைவரின் அரசு அடைந்து கொள்ள வேண்டிய நலன்களை முன்வைத்து அடுத்த எதிர்க்கட்சி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தல் குதிப்பார். அடிப்படைவாதம் பேசும் வேட்பாளர் ஒருபோதும்  வெற்றி பெற வேண்டிய தருணத்தில் அரசின்  நலனை மையப்படுத்தி பேசும் வேட்பாளர் வெற்றி பெறப் போவதில்லை. அதேபோன்று, அரசின் நலனை மையப்படுத்தி பேசும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டிய நேரத்தில் மதவாதம் பேசும் வோட்பாளர் வெற்றி பெறப் போவதுமில்லை. இதனை ஆன்மிகத் தலைவரின் அரசும் அவரது படைகளும் கவனமாக முகாமை செய்வதனை ஈரானிய அரசியல் வரலாற்றினை அவதானிக்கும்போது இலக்குவாக புரிந்து கொள்ள முடியும். சர்வதேச சுழல், பிராந்திய அரசியல் வலுச்சமநிலைகள் மற்றும் உள்ளக சமூக அரசியல், பொருளாதார ஏற்ற இறக்கங்களின் பின்புலத்தில் யாரை வெற்றி பெறச் செய்வது என்பதனை அரசு முடிவெடுக்கும். மொத்தத்தில், இரண்டு பேரில் யார் வெற்றி பெற்றாலும் ஆன்மிகத் தலைவரின் அரசும் அதன் படைகளும் வெற்றி பெறும் என்பதே சுருக்கமாகும். இதன் பின்னணியிலேயே நீங்கள் எங்கள் அரசை வெறுத்தாலும் உங்களுக்கு தரப்பட்டிருக்கும் வாக்கை பயன்படுத்தாமல் இருக்க வேண்டாம்” என்று தற்போதைய ஆன்மிகத் தலைவர் அலி கொமைனி கூறியிருந்தார்.

ஹசன் ரௌஹானி: அரசை விமர்சிக்கும் அரச தரப்பு வேட்பாளர்

இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ஈரானிய மதவாத அரசின் தேர்தல் தத்துவத்தின் நடைமுறைப் பிரயோகத்தை புரிந்து கொள்ள முடியும். அரசின் வேட்பாளராக இறக்கப்பட்ட பிரபல நீதிபதி ரஈஸி தோல்வியடைந்திருக்கிறார். உண்மையில், அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது அரசின் நோக்கமுமல்ல. மாறாக, சமூகத் தளத்தில் அரசின் அடிப்படைவாத கொள்கைகளுக்கு சார்பாக விவாதிப்பதற்கும் தேர்தல் களத்தில் நேரெதிர் விவாதங்களில் மறுப்புக்கு மறுப்பு கொடுக்கும் ஒரு பிரதிநிதி தேவைப்படுகிறார் என்பதும் தேர்தலில் உயர் வாக்களிப்பு விகிதத்தை உறுதிப்படுத்திக் கொள்வதுமே அரசின் தேவையாகும். எனவேதான், பிரபல ஈரானிய அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் மஹ்ஜூப் ஸூவைரி தேர்தலில் உயர் வாக்களிப்பு விகிதத்தை உத்தரவாதப்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும். அதனை ஆயதுல்லாஹ் ரஈஸி அரசுக்கு பெற்றுக் கொடுத்து விட்டார்” என தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தமையும் கோடிட்டுக் காட்டத்தக்கது. மறுபுறம், சீர்திருத்தவாத கோஷங்களுடன் கிளம்பிய ஹசன் ரௌஹானியை வெற்றி பெறச் செய்வதே அரசின் எதிர்பார்ப்பும்கூட. காரணம், ட்ரம்பின் வருகை, அகன்ற ஸுன்னி உலகில் தெஹ்ரானுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்மறை பொது அபிப்பிராயம், துருக்கியின் அரசியல் ஸ்திரத்தன்மை இணைந்து மதவாதம் பேசும் அரச வேட்பாளர் ஈரானில் வெற்றி பெறுவதானது தெஹ்ரானை சர்வதேச தளத்தில் தனிமைப்படுத்தி விடும். ரியாதுக்கும் அங்காராவுக்கும் மொஸ்கோவுக்கும் தெஹ்ரானின் நலன்களை பாதிக்கும் தெரிவுகளை நோக்கிச் செல்வதற்கு தூண்டல் காரணியாகவும் அது அமையக்கூடும். இந்தப் பின்புலத்தில், அரசின் வேட்பாளர் தோல்வியடைய வேண்டுமென்பதே ஆன்மிகத் தலைவரது அரசின் தேவையுமாகும்.

ஈரானியத் தேர்தல்களும் வெளிநாட்டுக் கொள்கையும்

மேலே கலந்துரையாடப்பட்ட ஈரானிய மதவாத அரசின் தேர்தல்கள் தத்துவத்தின்” ஒளியிலேயே அதன் அரசியல் பொறிமுறையை புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பின்புலத்தில், தேசத்தின் பிரதான வியூகங்களை, இராஜதந்திர நகர்வுகளை, நிதி மூலங்களை முகாமை செய்யும் உரிமையோ கண்காணிக்கும் கடமையோ பாராளுமன்றத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கோ இல்லை. ஆன்மிகத் தலைவர் உள்ளடங்கலான அரசு வகுத்துக் கொடுக்கும் திட்டங்களை செயற்படுத்தும் நடைமுறை சீர்திருத்தங்களில் (கூஞுஞிடணடிஞிச்டூ டிண்ண்தஞுண்) மட்டுமே பாராளுமன்றமும் ஜனாதிபதியும் தலையீடு செய்ய முடியும். குறிப்பாக நீதி, நீதி, பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு அமைச்சுகள் ஆன்மிகத் தலைவரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் அமைச்சுகளாகும். ஆன்மிகத் தலைவரும் அரசும் இராணுவமும் வகுத்துள்ள வெளிநாட்டுக் கொள்கையை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு இராஜதந்திர துறையை கையாள்வது மட்டுமே வெளிநாட்டமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும். மாறாக, பிராந்திய ரீதியான ஆன்மிகத் தலைவரின் அரசு முன்னெடுக்கும் எத்தகைய பிரயத்தனங்களையும் கேள்விகுட்படுத்தும் அதிகாரம் எந்த ஜனாதிபதிக்கோ அல்லது வெளிநாட்டமைச்சருக்கோ இல்லை. தேர்தலுக்கு முன்பு  வேட்பாளர்களுக்கு மத்தியில் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான விவாதத்தில் ஈரானிய அரசின் பிராந்திய நகர்வுகளை கேள்வி கேட்கும் அல்லது அதன் வரவு செலவுகளை விமர்சனம் செய்யும் ஒரு வார்த்தையையாவது வேட்பாளர்கள் மொழியாமல் இருந்தமை அதற்கு சிறந்த சான்றாகும். எனவே சிரியா, ஈராக், லெபனான் மற்றும் யெமன் போன்ற நாடுகளில் ஈரானிய அரசின் நகர்வுகளில் எந்த ஜனாதிபதியாலும் தலையீடு செய்ய முடியாது. அது மக்கள் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மிகத் தலைவரினதும் அவரது படையினதும் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள விவகாரமாகும்.

இறுதியாக, இத்தனைக்கும் அப்பால் ஈரானியர்கள் ஏன் வாக்களிக்கச் செல்கிறார்கள்? என்பதும் அலசப்பட வேண்டிய விடயமாகும். பிரபல ஈரானியக் கற்கைகள் துறை பேராசிரியர் ஹாமித் தப்பாஷி கூறுவது போல் குறைந்தபட்சம் சீர்திருத்தம், சிவில் சுதந்திரம், பொருளாதார அபிவிருத்தி போன்ற சுலோகங்களையாவது பாதுகாத்துக் கொள்வதே ஈரானியர்களது தேர்தல் பங்கேற்பை நியாயப்படுத்த முடியுமான ஒரே காரணியாகும். மேலும், சீர்திருத்த வேட்பாளர் முன்வைக்கும்  சுலோகங்கள் நிதர்சனமாக நிறைவேற்றப்படுவதானது ஆன்மிகத் தலைவரின் அரசுக்கு கொடுக்கும் மரண அடி என்பதால் ஒருபோதும் அவை நிறைவேற்றப்பட மாட்டாது என்பது ஈரானியர்களுக்கு நன்றாகவே தெரியும். என்றாலும், தனக்கு கிடைக்கும் குறைந்தபட்ச அனுமதியைப் பயன்படுத்தி ஆன்மிகத் தலைவருக்கு ஏதேனும் செய்தியை கிட்டச் செய்ய  வேண்டும் என்பதே ஈரானியர்களது உள்மனது சொல்லும் செய்தியாகும். உதாரணத்திற்கு, தற்போதைய புதிய ஜனாதிபதி ரௌஹானியின் தேர்தல் வாக்குறுதிகள் அபாரமானவை. அதிலொன்று, ஈரானிய அரசியலில் அரச படைகளது அரசியல் தலையீடுகளை குறைப்பதாகும். தற்போதைய ஈரானிய அரசியல் கட்டமைப்பில் இவ்வாக்குறுதியை நிறைவேற்றுவதை நினைத்தும் பார்க்க முடியாது. எனவே, குறைந்தபட்சம் கிடைக்கும் வாயப்புகளையாவது பயன்படுத்தல்” என்ற அடிப்படையிலேயே ஈரானியர்களது தேர்தல் பங்கேற்பு அமைந்துள்ளது. இதுவே ஈரானிய அரசியலை இயக்கும் ஆன்மிகத் தலைவரை மையப்படுத்திச் சுற்றிச் சுழலும் தேர்தல் சட்டகமும் தத்துவமுமாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *