Iman Spiritual Upliftment

உரமாக இறையச்சம்! மரமாக சகோதரத்துவம்!

உரமாக இறையச்சம்!

மரமாக சகோதரத்துவம்!

-அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் (நளீமி)-

 

காற்று, மழை, வெயில் என்பவற்றோடு நாளாந்தம் போராடி எழுந்து நிற்கிறது அந்தக் கட்டிடம்; விழுந்து விட வாய்ப்பில்லை. எளிதில் அதை விழுத்தி விடவும் இயலாது. காரணம், அதன் அத்திபாரம் உறுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் கற்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. கற்களைப் பிணைக்கின்ற பணியை சாந்து (சீமெந்து) கச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தூண்கள் அதற்கேயுரிய பணியைச் செய்கின்றன. கூரை தனது பொறுப்பை சரியாக மேற்கொள்கிறது. கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் தத்தமது பொறுப்புக்களை நிறைவேற்றுகின்றன. எனவே, அந்தக் கட்டிடம் தலைநிமிர்ந்து நிற்கிறது.

ஆம், இத்தகையதொரு கட்டிடத்துக்கு முஸ்லிம் சமூகத்தை ஒப்பிடுகிறார்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.

முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் கட்டிடத்தின் கற்கள் போன்று ஒவ்வொரு முஸ்லிமும் சமூகமாய் இணைந்திருக்க வேண்டும்; பிணைந்திருக்க வேண்டும்; ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தோள் கொடுக்க வேண்டும். ஈமானிய சாந்து அவர்களைப் பிணைக்க வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் சமூகம் பலம் பெறும்; வளம் பெறும்.

ஆனால், இன்று முஸ்லிம்கள் தனித் தனிக் கற்களாக இருக்கிறார்கள். சமூகத்துக்கு ஏதாவது ஆபத்து வந்து விட்டால், அச்சுறுத்தல் பலமாக விடுக்கப்பட்டால், இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு விட்டால் எங்கே முஸ்லிம் சமூகம் தாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் மேலிட்டு விட்டால் முஸ்லிம்கள் சேர்ந்து கொள்கின்றார்கள். நெருங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் மாத்திரம் வேகமாக நெருங்கிக் கொள்கிறார்கள். பின்னர் அதனை விட வேகமாக பிரிந்து கொள்கிறார்கள்.

இவர்களை இணைப்பதும் பிரிப்பதும் எது தெரியுமா? அச்சம்! அச்சம்! அச்சம்! உயிர், உடைமைகள் பறிபோய் விடுமென்ற அச்சம்!

ஈமானிய சாந்து கொண்டு முஸ்லிம் சமூகம் பிணைக்கப்படுகின்றபோது மாத்திரமே சகோதரத்துவம் பலப்படும். இல்லா விட்டால் இணைவதும் பிரிவதும் வாடிக்கையாகி விடும்!

அவ்வாறே முஸ்லிம் உம்மத் ஓர் உடலுக்கு ஒப்பானது. அதன் அங்கத்தவர்கள் ஓர் உடலின் வெவ்வேறு உறுப்பைப் போன்றவர்கள். ஓர் உறுப்பு வேதனை அனுபவித்தால் முழு உடலும் அதனை உணர்வது போல் முஸ்லிம் சமூகமும் வேதனையில் பங்கெடுக்க வேண்டும்; துன்பத்தில் பரஸ்பரம் தோள் கொடுக்க வேண்டும்; பரஸ்பரம் அன்பு கொள்ள வேண்டும். அன்பு, கருணை, பரிவின் வெளிப்பாடு அத்தனை செயற்பாடுகளிலும் பிரதிபலிக்க வேண்டும்.

அப்போதுதான் முஸ்லிம் உம்மத் ஓர் உடலைப் போன்று உருப்பெறும். அதற்கு இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் துணை புரிகின்றன. இஸ்லாத்தின் அனைத்து வணக்க வழிபாடுகளுக்குப் பின்னாலும் உயர்ந்த நோக்கங்கள் உள்ளன. அவற்றின் தாற்பரியங்கள் ஏராளம். அவற்றின் மூலம் ஒரு முஸ்லிம் பண்பட வேண்டும்; பக்குவப்பட வேண்டும்; உயர் விழுமியங்களின் சொந்தக்காரனாக வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் எதிர்பார்ப்பு.

அந்த வகையில் நோன்பும் ரமழானிய பொழுதுகளும் சகோதரத்துவ உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. ஒரு கட்டிடத்தைப் போல, ஓர் உடலைப் போல முஸ்லிம் சமூகத்தை பிணைப்பதற்கான பிரத்தியேக ஏற்பாடே வருடாந்தம் வருகிற நோன்பு.

பெரும்பாலும் அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்கின்றனர். தொழுகையில் அசட்டையாக இருப்பவர்கள்கூட ரமழானில் நின்று வணங்குகின்றனர். தொழா விட்டாலும் சிலர் பக்தியோடு நோன்பு நோற்கின்றனர். ஏனைய கடமைகளோடு ஒப்பிடுகின்றபோது நோன்பு நோற்கும் விடயத்தில் எமது சமூகம் சீரியஸாக இருக்கிறது என்பது உண்மைதான். எனினும், நோன்பின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற அடைவுகள் எட்டப்படுகிறதா? என்பது கேள்விக்குறிதான்.

அந்த வகையில் சகோதரத்துவ உறவுக்கு வலுச் சேர்க்கும் ரமழானிய பாடங்கள் சிலவற்றை மாத்திரம் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்:

உரமாக இறையச்சம் மரமாக சகோதரத்துவம்!

நோன்பு விதியாக்கப்பட்டதன் நோக்கமே தக்வா பசுமையாக இருக்க வேண்டுமென்பதுதான். இதனையே ஸூரதுல் பகராவின் 185 வது வசனம் பறைசாற்றுகிறது. அல்லாஹ்வுடனான உறவாக இருக்கலாம் மனிதர்களுடனான உறவாக இருக்கலாம். எதுவானாலும் இறையச்சத்தின் மீது அது கட்டியெழுப்பப்பட வேண்டும். அப்போதுதான் அது ஈருலகிலும் நிலைத்து நிற்கும்.

்சீஇறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர்ீீ (49: 10) எனக் குறிப்பிடும் அல்குர்ஆன், இறையச்சத்தை உரமாகக் கொண்டு மரமாக எழுந்து நிற்காத உறவுகள் அனைத்தும் மறுமையில் சரிந்து விழும் என்று பின்வருமாறு எச்சரிக்கை விடுக்கிறது:

்சீஅந்த மறுமை நாளில் ஏனைய நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவர்; இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களைத் தவிர!ீீ (43: 67)

நோன்பு முஸ்லிம் சமூகத்தின் இறையச்சத்தை அதிகரித்திருக்கிறது என்றால், சமூகத்தில் சகோதரத்துவம் பூத்துக் குலுங்க வேண்டும்; பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் விண்ணைத் தொட வேண்டும். சமூகத்தின் இறையச்சத்தில் மாற்றமில்லையென்றால் சமூகத்திலும் மாற்றம் நிகழாது. சகோதரத்துவமும் மனிதநேயமும் தேயுமே தவிர வளராது.

சர்ச்சை வேண்டாம்! சமாதானமே வேண்டும்!

்சீநோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் தீய பேச்சுக்கள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் ்நான் நோன்பாளி!ீ என்று அவர் சொல்லட்டும்!ீீ (ஸஹீஹுல் புகாரி)

்வீண் சர்ச்சை வேண்டாம்; சமாதானமே வேண்டும்ீ என்று அறிவிப்புச் செய்யுமாறு கற்றுத் தருகிறது மார்க்கம். உரையாடும்போது ஒழுங்கு முறை கடைப்பிடிக்காதிருப்பது, கண்ணியக் குறைவாக நடந்து கொள்வது, அளவின்றி விமர்சனம் செய்வது, வீணாகத் தர்க்கிப்பது, அவசரமாக ஆவேசப்படுவது இவையெல்லாம் சகோதரத்துவத்துக்கு வேட்டு வைக்கின்றன. தீய பேச்சும் ஏச்சும் சண்டையும் சகோதரத்துவத்தின் கழுத்துக்கு கத்தி வைக்கும் ஆயுதங்கள். அவற்றைக் கையிலெடுக்க வேண்டாம் என கற்றுத் தருகிறது ரமழான்.

பசித்திருப்பதும் பசி தீர்ப்பதும் கடமை!

பதினொரு மாதங்களாக வயிறார உண்டது போதும். வருடம் முழுக்க பாதி வயிறு, கால் வயிறு நிரப்பியவர்களின் நிலையைக் கொஞ்சம் பாருங்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்டு வாழ்பவர்களின் வயிற்றுப் பசியை நீங்களும் உணருங்கள்; அவர்களுக்கு உதவுங்கள் என்ற செய்தியை உரத்துச் சொல்கிறது நோன்பு.

பசித்திருப்பதையும் பசி தீர்ப்பதையும் கடமையாக்கிய மார்க்கம் இஸ்லாம். ரமழானில் பசித்திருப்பதன் நோக்கங்களுள் ஒன்று, பசியாற்றுவது என்ற உண்மையப் புரிந்து கொண்டால் பட்டினிச் சாவுக்கு சாவுமணி அடிக்கலாம் பசிக் கொடுமைக்கு கொள்ளி வைக்கலாம்; இறைநிராகரிப்புக்கு இட்டுச் செல்லும் வறுமையின் வாயிலை இழுத்து மூடலாம்.

எனவேதான்; ரமழானில் ஸகாதுல் பித்ர் கடமையாக்கப்பட்டிருக்கிறது. நோன்பு நோற்கும் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. பெருநாள் தினத்தில் எவரும் பசித்திருக்கலாகாது; உங்கள் சகோதரரின் பசியைப் போக்குவது உங்கள் மீது கடமை! அதற்காகத்தான் ஸகாதுல் பித்ர்!

வருடம் முழுவதும் பசியினால் வாடும் உங்கள் சகோதரனின் பசி தீர்ப்பது உங்களது பொறுப்பு என்ப்தை வலியுறுத்தவே அந்த ஏற்பாடு!

தர்மத்தின் தலைவாசல் ரமழான்!

ரமழான் தர்மத்தின் தலைவாசல். உள்ளம் உருகி, மனம் கசிந்து, ஏழைகளின் கண்ணீர் துடைக்க வேண்டும் என்ற உணர்வு எல்லோர் உள்ளங்களிலும் பிரவாகம் எடுக்க நோன்பு வழி சொல்கிறது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கொடை கொடுப்பதில் மனிதர்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். ்சீதர்மத்தில் சிறந்தது ரமழானில் வழங்கப்படும் தர்மமாகும்ீீ என்று குறிப்பிட்ட நபியவர்கள், சுழன்றடிக்கும் காற்றை விட வேகமாக தர்மம் செய்ததும் ரமழான் மாதத்தில்தான்.

குப்ரிலிருந்து பாதுகாப்புத் தேடிய நபியவர்கள், அதனுடன் இணைத்து ்சீபக்ர்ீீ என்ற வறுமையில் இருந்தும் பாதுகாப்புத் தேடியிருக்கிறார்கள். வறுமை மனிதனின் ஈமானுக்கு மாத்திரமன்றி, அவனது நடத்தைக்கும் பண்பாட்டுக்கும் வேட்டு வைக்கும் வல்லமை படைத்தது.

்சீஒருவன் கடன்காரனாகி விட்டால் பேசினால் பொய் சொல்லக் கூடும்; வாக்களித்தால் மாறு செய்யக் கூடும்ீீ என்றார்கள் நபியவர்கள்.

வறுமை மனிதனின் சிந்தனையை சீர்குலைக்கும். ்சீவீட்டில் உண்பதற்கு கோதுமை மா இல்லாத நிலையில் இருப்பவனிடம் சென்று ஆலோசனை கேட்க வேண்டாம்ீீ என்று இமாம் அபு ஹனீபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதன் பின்னணி இதுதான்.

்சீஒரு நீதிபதி பசியுடன் இருக்கும் நிலையில் தீர்ப்பு வழங்கக் கூடாதுீீ என்கிறார்கள் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள்.

குடும்பக் கட்டமைப்பின் சீர்குலைவுக்கும் வழிகோலுகிறது வறுமை. எனவேதான், அத்தகைய வறுமையின் கோரப் பிடியிலிருந்து சகோதர முஸ்லிமை விடுவிக்குமாறு பணித்த நபியவர்கள் அதனை ரமழானில் முன்னின்று செய்தும் காட்டினார்கள்.

ஹிரா குகையில் முதன் முறையாக ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைச் சந்தித்து இறைச் செய்தியை பெற்றுக் கொண்ட நபியவர்கள், இதயம் படபடத்தவராக தனது மனைவி கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் வந்து ்சீஎன்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்ீீ என்றார்கள். கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) நபியவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டு தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள், ்சீஅவ்வாறு கூறாதீர்கள். இறைவன் மீது ஆணை! உங்களை ஒருபோதும் இறைவன் இழிவுபடுத்த மாட்டான். ஏனெனில், நீங்கள்,

  1. உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்.
  2. சிரமப்படுவோரின் சுமைகளை சுமந்து கொள்கிறீர்கள்.
  3. வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்.
  4. விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்.
  5. உண்மையான சோதனைகளில் (சிக்கியிருப்போருக்கு) உதவி புரிகின்றீர்கள்ீீ என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தனது கணவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பயத்தால் பதறியபோது நபியின் அருமை மனைவி கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களும் சேர்ந்து பதறவில்லை; நிதானமிழக்கவில்லை; யாருமற்ற குகையில் தனியாக இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்று நச்சரிக்கவில்லை. அன்புக் கணவரின் அருகில் அமர்ந்து ஆறுதல் சொல்கிறார் அவர் மனதை தேற்றுகிறார். அவரோடு ஒட்டிப் பிறந்த ஐந்து நற்குணங்களை ஞாபகமூட்டி அவரைப் போற்றுகிறார்.

நீங்கள் பிறருக்காக வாழ்கிறீர்கள், மனிதநேயமும் சகோதரத்துவ உணர்வும் பிறர் மீதான அக்கறையும் உங்களை வாழ வைக்கும்; மாள வைக்காது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள் கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள்.

இத்தகைய உயரிய பண்புகளை வளர்ப்பதும் நோன்பின் உயரிய குறிக்கோள்.

பொறுமையும் நிதானமும் நோன்பின் தூண்கள்!

வாழ்க்கை ஒரு போராட்ட களம். இன்பமும் துன்பமும் நிறைந்தது. பிரச்சினைகளும் சவால்களும் வரும். தனிப்பட்ட வாழ்வோ குடும்ப வாழ்வோ சமூக வாழ்வோ எதுவானாலும் வெவ்வேறு மனிதர்களுடன் தொடர்பு கொண்டே ஆக வேண்டும். அப்போது பொறுமையும் நிதானமும் அவசியம். எப்போதும் எம்மோடு ஒட்டியிருக்க வேண்டியப உயர் பண்புகள் அவை. இல்லா விட்டால் வாழ்வே கசந்து விடும். எடுத்ததெற்கெல்லாம் கோபத்தை கொப்பளிப்பதனால் ஆகப் போவது எதுவுமில்லை, இரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தவிர. கோபத்தை மென்று விழுங்கி விடுங்கள் என்கிறது அல்குல்ஆன். கோபமும் ஆவேசமும் சகோதரத்துவத்தின் அத்திபாரத்தை ஆட்டங்காணச் செய்யும் ஆயுதங்கள்.

பொறுமையும் நிதானமும் நோன்பின் இரு தூண்கள். சகோதரத்துவத்தின் கண்கள். பொங்கி எழுந்து போர்க் கொடி தூக்குவதை விட பொறுமையாக இருந்து சகித்துக் கொள்வது எவ்வளவோ மேல்! சுவனத்தின் மற்றுமொரு திறவுகோல் பொறுமை என்பதைப் புரிந்து கொண்டால் கோபத்தை இலகுவில் மென்று விடலாம்; வாழ்வில் வென்று விடலாம்.சீசீஅவர்கள் பொறுமையாக இருந்ததன் காரணமாக சுவர்க்கத்தை கூலியாக கொடுத்தோம்ீீ என்கிறது அல்குர்ஆன்.

்சீஒரு முஃமினின் விடயம் ஆச்சரியமானது. அவனுக்கு எல்லாமே நலவாக அமைகின்றது. அவனை மகிழ்வுட்டும் ஒன்றை அடைந்து கொண்டால் அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவான். அது அவனுக்கு நலவாக அமையும். அவனுக்கு தீங்கேதும் ஏற்பட்டால் பொறுமையாக இருப்பான். அதுவும் அவனுக்கு நலவாக அமைந்து விடும்ீீ என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

ஓர் இறைவிசுவாசிக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகப் பெரும் பாக்கியம் பொறுமையாகும். அதனைப் புதுப்பித்து சகோதரத்துவத்தை வலுப்படுத்த வருடாந்தம் வருகிறது ரமழான்.

தவிரவும் மன உறுதி, நிலைகுலையாமை, தியாகம், படைப்பினங்கள் மீதான பரிவு, அன்பு, இரக்கம் இவை போன்ற பண்புகள் தனி மனிதர்களின் பண்புகளாகவும் சமூகத்தின் பண்புகளாகவும் வளர ரமழான் நீர் பாய்ச்சுகிறது; உரம் சேர்க்கிறது.

இப்படி ஓர் உறுதியான கட்டிடம் போல் முஸ்லிம் சமூகத்தைக் கட்டியெழுப்ப ரமழான் எமக்கு பல கட்டுச்சாதனங்கள் தருகிறது. அவற்றை அடுத்த ரழமான் வரும் வரை வீட்டு மூலைக்குள் போட்டு விடாமல் சகோதரத்துவ கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டே இருப்போம், கட்டிடம் முழுமை பெறும் வரை!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *