General Knowledge Philosophy

கருத்து வேறுபாடுகள் பிக்ஹுடன் தொடர்புறும் அடிப்படைகள் 01

கருத்து வேறுபாடுகள்

பிக்ஹுடன் தொடர்புறும் அடிப்படைகள் 01

 

அஷ்ஷெய்க் மஸ்ஹர் ஸகரிய்யா (நளீமி)

கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி அவர்களின் கைப நதஆமலு மஅத் துராஸ் எனும் நுலைத் தழுவி எழுதப்பட்டது.

 

இருபதாம் நூற்றாண்டு ஈன்றெடுத்த அரிய ஆளுமைகளுள் ஒருவர் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள். 1928இல் இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் இயக்கத்தைத் தோற்றுவித்து இயக்க ஊழியர்களை ஆன்மிக ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பயிற்றுவிப்பதற்கான பல அடிப்படைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். இந்த வகையில் சிந்தனா ரீதியாக ஊழியர்களை வலுப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் இருபது அத்திவாரங்கள்” எனும் தலைப்பில் தொகுத்து குறித்த இருபது அடிப்படைகள் தொடர்பாகவும் தெளிவான விளக் கத்தை இயக்க ஊழியர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தார்கள்.

 

குறித்த 20 அடிப்படைகளில் ஒவ்வோர் அடிப்படையையும் நான்கைந்து வரிகளில்  இரத்தினச் சுருக்கமாக விளக்கினார்கள். இவற்றை பிற்காலத்தில் வந்த பல அறிஞர்கள் மிக விரிவாக விளக்கினார்கள். இவர்களுள் கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி, ஷெய்க் அல்கஸ்ஸாலி போன்றவர்கள் முக்கியமானவர்களாவர். ஷெய்க் அல்கஸ்ஸாலி துஸ்தூருல் வஹ்தா அஸ்ஸகாபிய்யா” என்ற நூலில் இவ் இருபது அடைிப்படைகளை விளக்கியிருக்க, அல்லாமா யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் ஒரு சில அடிப்படைகளை விளக்க தனியான நூல்களையும் மற்றும் சில  அடிப்படைகளை யும் ஒன்றிணைத்து ஒரு நூலாகவும் வெளியிட்டார்கள்.

 

இமாம் ஹஸனுல் பன்னாவின் எட்டாவது அடிப்படை, கருத்துக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து பேசுகின்றது.

கிளைப் பிரச்சினைகளில் ஏற்படும் அபிப்பிராய பேதங்கள் மார்க்கத்தில் பிரிவினை ஏற்படவோ இரு சாராருக்கு மத்தியில் பகைமை ஏற்படவோ காரணமாக அமையக் கூடாது. ஒவ்வொரு முஜ்தஹிதும் அவர் இஜ்திஹாத் செய்ததற்கான கூலியைப் பெற்றுக் கொள்வார். உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் நோக்கிலும் இறை அன்பைப் பெறுவதற்காகவும் கிளைப் பிரச்சினைகளில் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளல் தடுக்கப்பட்டதல்ல. எனினும், குறித்த முயற்சி மார்க்கத்தில் தடுக்கப்பட்ட மோதல்களுக்கோ கண்மூடித்தனமான பின்பற்றுதல்களுக்கோ இட்டுச் செல்லக் கூடாது.

 

இவ்வடிப்படையை இமாம் யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் மிக விரிவாக தனது கைப நதஆமலு மஅத் துராஸ் வல்மத்ஹுப் அல்பிக்ஹி” எனும் நூலில் தெளிவுபடுத்துகின்றார். அதனூடாக அபிப்பிராய பேதங்களின்போது கடைபிடிக்க வேண்டிய 19 அடிப்படைகளை தெளிவுபடுத்துகின்றார் கள். அவற்றை ஒவ்வொன்றாக சற்று ஆழமாக தொகுத்து வழங்கும் முயற்சியே இது. இவற்றையே அல்லாமா யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் அபிப்பிராய பேதங்கள் தொடர்பான பிக்ஹுடன் தொடர்புறும்  அடிப்படைகள் என்றழைக்கின்றார்.

 

இமாமவர்கள் முன்வைத்த மேற்படி அடிப்படை பிர தான இரு உண்மைகளை உணர்த்தி நிற்கின்றது.

  1. மார்க்கத்தில் கிளைப் பிரச்சினைகளுள் ஏற்படும் அபிப்பிராய பேதங்கள் சமூகத்தில் பிளவுகளும் குரோதங்க ளும் ஏற்படக் காரணிகளராக அமைந்து விடக் கூடாது.

 

எமது முன்னோர்களாகிய மிகப் பெரும் அறிஞர்கள் எமக்கு மேற்குறித்த விடயத்தில் மிகச் சிறந்த முன்மாதிரிகளாவர். அவர்கள் கருத்துக்களில் வேறுபட்டிருந்தபோதிலும் உள்ளங்களால் ஒன்றுபட்டிருந்தனர். இமாம் தஹபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது ஸியரு அஃலாமின் நுபலா” என்ற நூலில் இமாம் ஷாபியின் வரலாற்றுப் பதிவொன்றை நினைவுபடுத்துகின்றார்.

அபூ மூஸா யூனுஸ் என்பவர் இமாம் ஷாபியின் முக்கிய மாணவர்களுள் ஒருவர். அவர் கூறுகின்றார்:

 

இமாம் ஷாபியை விட சிறந்ததோர் அறிஞரை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. ஒரு முறை நாம் ஒரு விடயம் தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தோம். எந்த ஒரு முடிவையும் காணாமலே நாம் அன்று பிரிந்து சென்று விட்டோம். பின்னர் என்னை சந்தித்த இமாமவர்கள் எனது கையைப் பிடித்தவாறு அபூ மூஸாவே எம்மால் குறித்த விடயத்தில் ஓர் உடன்பாட்டுக்கு வர முடியாவிட்டாலும் நாம் தொடர்ந்தும் சகோதரர்களாக இருக்க முடியுமல்லவா” என்று கூறினார்.

இமாமவர்களது அறிவின் பூரண முதிர்ச்சி நிலையையே இந்த சம்பவம் தெளிவுபடுத்துகின்றது என்று இமாம் தஹபி குறிப்பிடுகின்றார். பேரறிஞர் அப்பாஸ் இப்னு அப்துல் அழீம் அல்அன்பரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நான் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் ஒருமுறை இருந்தபோது அங்கு அலீ இப்னுல் மதனி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது ஒட்டகத்தில் வந்தார்கள். இருவரும் ஷஹாதத் (வீர மரணம்) பாக்கியம் கிடைத்த மனிதர்கள் தொடர்பாக கலந்துரையாடத் தொடங்கினார்கள். பத்ர் யுத்தம் மற்றும் ஹுதைபியா உடன்படிக்கை ஆகியவற்றில் கலந்து கொண்டவர்களும் யுத்த காலங்களில் இரத்தம் சிந்தியவர்களுள் நபியவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டவர்களும் ஷஹாதத் அந்தஸ்த்தைப் பெறுவர் என்பது இமாம் ஹன்பலி யின் கருத்தாக இருந்தது.

 

இக்கருத்துடன் இமாம் அலீ இப்னுல் மதீனி (ரஹிமஹுல் லாஹ்) உடன்படாததால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இருவரும் அந்த விடயத்தில் தமது வாதங்களை கடுமையாக முன்வைத்ததால் அவர்களிருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது. வாதம் ஒரு முடிவை எட்டாமல் இருந்தபோது  இமாம் அலீ இப்னுல் மதீனி (ரஹிமஹுல் லாஹ்) அவர்கள் அவ்விடத்திலிருந்து ஒரு முக்கிய வேலை யாக விடைபெற்றுச் செல்ல முற்பட்டபோது இமாம் அஹ்மத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும் எழுந்து அவர்களது ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து அவர்களை வழியனுப்பினார்கள். இப்படித்தான் எமது முன்னோர்களின் கலந்துரையாடல் களும் வாக்குவாதங்களும் முற்றுப் பெற்றுள்ளன.  எமது முன்னோர்களின் வரலாற்றில் மேற்கூறியது போன்ற ஏராளமான உதாரணங்கள் நடந்திருப்பதாக இமாம் தஹபி தனது ஸியரு அஃலாமின் நுபலாவில் உதாரணங்களுடன் குறிப்பிடுகின்றார்.

பல கருத்துக்களில் பொருத்தமான கருத்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இஸ்லாம் இஜ்திஹாதை கடமையாக்கியுள்ளது.

இஜ்திஹாத் செய்யும் முஜ்தஹித் தனது இஜ்திஹாதை சரியாகச் செய்தாலும் சரி, தவறிழைத்தாலும் சரி இரண்டுக் கும் கூலி உள்ளது என்று கூறுகின்ற மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. முஜ்தஹித் தனது இஜ்திஹாதை சரியாக செய்து விட்டால் அவருக்கு இரு நன்மைகள். அவர் இஜ்திஹாதில் பிழைவிட்டால் அவர் செய்த முயற்சிக்காக ஒரு நன்மை கிடைக்கும் என்று கூறுகின்ற மற்றுமொரு மார்க்கத்தை நாம் எங்கு காண முடியும்?

அஹ்ஸாப் யுத்தத்திலிருந்து நபி (ஸல்லல்லாஹு

அலைஹி வஸல்லம்) அவர்கள் வெற்றியுடன் திரும்பிய பின் யுத்தக் களைப்பை போக்கிக் கொள்ள குளிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹுத் தஆலா நபியவர்களுக்கு கட்டளை ஒன்றை பிறப்பித்தான். அஹ்ஸாப் யுத்தத்தில் முஸ்லிம்களுடன் நயவஞ்சகத்தன மாக நடந்து கொண்ட பனூ குரைழாக்களை முஸ்லிம்கள் தோற்கடிக்க வேண்டும் என்பதே இறைவனின் கட்டளை. எனவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸஹாபாக்களில் ஒரு குழுவைத் தெரிவுசெய்து நீங்கள் பனூ குரைழாக்கள் வாழ்கின்ற இடத்தை அடையும் வரை அஸர் தொழக் கூடாது” என்று அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தார்கள். அந்த ஸஹாபாக்கள் பனூ குரைழாக்களின் இருப்பிடம் நோக்கி பயணம் செய்தபோது இடைவெளியில் அஸர் தொழுகைக்கான நேரம் நெருங்கவே அங்கு இரு குழுக்களாகப் பிரிந்து நின்றனர். ஒரு குழு நபியவர்கள் சொன்ன விடயத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி நபியவர்களது சொல்லை நிறைவேற்றத் தயரானது. (பனூ குரைழாக்கள் வாழுமிடத்தை அடைந்த பின்னர் அஸர் தொழ வேண்டும் என நபியவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது). மறு குழு நபியவர்கள் அந்த வார்த்தைகளினூடாக சொல்ல வந்த கருத்தை அமுல்படுத்த தயாரானார்கள். எமது பயணத்தை விரைவுபடுத்தும் நோக்கிலேயே நபியவர்கள் அவ்வாறு கூறினார்களே ஒழிய அஸர் தொழுகையை பிற்படுத்தும் நோக்கம் அவர்களிடம் இருக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள். எனினும், இவ்விரு சாராருக்கும் மத்தியில் எழுந்த அபிப்பிராயபேதம் அங்கு அவர்களது சகோதரத்துவத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

அஸர் தொழுகையை தொழுது விட்டு செல்ல வேண் டும் என்ற கருத்தில் இருந்தவர்கள் அஸர் தொழுது முடியும் வரை மறு குழு காத்திருந்தனர். இரு சாராரும் ஒன்றாகவே பனூ குறைழாக்களின் இடத்தை அடைந்து அவர்களோடு போராடி வெற்றி கொண்டனர். அவர்கள் மதீனாவுக்குத் திரும்பிய பின்னர் நபியவர்களிடம்  தமக்கு மத்தியில் ஏற்பட்ட அவ்வபிப்பிராய பேத நிகழ்வை கூறியபோது நபியவர்கள் அவ்விரு குழுக்களின் கருத்துக்களையும் ஏற்று அங்கீகரித்தார்கள்.

மற்றுமொரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை யமனுக்கு நீதிபதியாக அனுப்ப விரும்பியபோது அவர்களை அழைத்து அல்குர்ஆனிலோ அஸ்ஸுன்னாவிலோ தீர்வற்ற பிரச்சினை ஒன்றுக்கு எவ்வாறு தீர்ப்பளிப்பீர்?” என்று கேட்டார்கள். முஆத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆய்வுசெய்து சுயமாக முடிவெடுப்பேன்” என்று கூறியபோது அக்கருத்தை ஏற்று அங்கீகரித்து அவருக்கு வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார்கள்.

எனவே, மேற்படி நிகழ்வுகள் பல்வேறு கருத்துக்கள் எழும்போது இஜ்திஹாத் செய்வதன் அவசியத்தையும் குறித்த இஜ்திஹாத் பிழையாக அமைந்தால்கூட நன்மை கிடைக்கும் என்பதையும் உணர்த்துகின்றன.              ஞ்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *