Hadees Islamic Knowledge Knowledge

ரமழானும் இறைதூதரும்

ரமழானும் இறைதூதரும்

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:  ரமழான் மாதம் வந்து விட்டால் வானுலக கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் இறுக மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றார்கள்.”  (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

ரமழான் மாதத்தின் இயல்புத் தன்மை குறித்து மனிதருள் மாணிக்கம் மாநபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் இந்த ஹதீஸில் பதியப்பட்டுள்ளன. இமாம் புகாரியின் மற்றுமோர் அறிவிப்பில், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

மேற்படி ஹதீஸை உண்மைப் பொருளிலும் விளங்க முடியும். அதாவது, ரமழான் மாதம் வந்து விட்டதையும் அது மகத்துவப்படுத்தப்பட்டிருப்பதையும் இறை விசுவாசிகளுக்கு தொல்லை கொடுப்பதை விட்டும் ஷைத்தான் தடுக்கப்பட்டு விட்டதையும் மலக்குகளுக்கு அறிவிக்கின்ற அடையாளமாக இவை அமைகின்றன என காழி இயாழ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மேலும் அவர்கள் இந்த மாதம் அதிகரித்த கூலியையும் மன்னிப்பையும் பெற்றுத் தருகின்ற மாதமாகவும் அமைவதைப் போல ஷைத்தான்களின் வழிகேடுகள் குறைந்து அவர்கள் விலங்கிடப்பட்டவர்களைப் போல மாறி விடுகின்றனர் என்றும் குறிப்பிடுகின்றார்கள். இதனை ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஆறு வாயில்கள் திறக்கப்பட்டு விடும்” என்ற ஹதீஸ் உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிடுகின்றார்கள். சுவன வாயில் திறக்கப்படுவது என்பது அல்லாஹ் தனது அடியார்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கான அறச்  செயல்களை திறந்து விடுகின்றான் என்பதாகும். அது சுவனம் செல்வதற்கான வழிமுறைகளாக அமையும். நரக வாயில்கள் இறுக மூடப்பட்டு விடும் என்பது நரகத்திற்கு வழிவகுக்கின்ற பாவ காரியங்களை விட்டும் மனவலிமை திசை திருப்படும் என்றும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுதல் என்பது மனிதர்களை வழிகெடுத்தல், இச்சைகளை  அழகுபடுத்திக் காட்டுதல் முதலானவற்றை செய்ய முடியாமல் ஷைதான்கள் மாறி விடுவர் என்றும் காழி இயாழ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தொடர்ந்தும் விளக்கம் அளிக்கின்றார்கள். (பத்ஹுல் பாரி)

நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது இந்த ஹதீஸ் ரமழானின் மகத்துவத்தை விளக்குகிறது. ரமழான் சிறப்புற்று விளங்க அல்குர்ஆனே காரணமாயிற்று. இது ஓர் ஆன்மிகப் பயிற்சிப் பாசறை. இதில் முஸ்லிம்கள் வருடத்துக்கு ஒரு முறை சிந்தனா ரீதியாக ஆன்மா மற்றும் உடல் ரீதியாக புடம் போடப்படுகின்றார்கள். ஏனெனில், அவர்கள் மனிதர்களை வாழ வைக்க வந்த இறை சைனியம். இவர்கள் நோற்கும் நோன்பு ஆன்மிகக் களிப்பையும் ஆத்மானந்தத்தையும் இலக்காகக் கொண்ட வெறும் விரத அனுஷ்டானமல்ல. நோன்பு இகாமதுத் தீன் பணியை, இழ்ஹாருத் தீன் எனும் மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் பணியை முன்னெடுப்பதற்கான ஆன்ம பலத்தையும் மன வலிமையையும் நிர்மாணிக்கின்றது. அவ்வாறெனில், இந்தப் பணியில் முன்மாதிரி மிக்க தலைவராகத் திகழ்ந்த முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழான் மாதத்தை எவ்வாறு நோக்கினார்கள்? அவர்களுக்கும் இந்த மாதத்திற்கும் இடையேயான ஆத்மார்த்த உறவு என்ன? என்பதை விளங்குவது சாலச் சிறந்ததாக அமையும்.

வணக்க வழிபாடுகளில் அதீத ஆர்வம்

ரமழான் என்பது பருவ காலம். அது கழிந்து சென்று விட்டதென்றால் மீண்டும் அந்த அரிய சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் விடும் என்ற பயபக்தியினால் நபிகளார் அம்மாதத்தை கன கச்சிதமாகப் பயன்படுத்தினார்கள். அதன் மூலம் உச்ச பயனைப் பெற்றுக் கொண்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது நோன்பு உள்ளிட்ட இதர உபரியான வணக்க வழிபாடுகள் அனைத்தும் ரமழான் காலத்தில் அலாதியானதாகவே அமைந்திருந்தன. ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏனைய மாதங்களில் வணக்க வழிபாடுகளில் சிரத்தை எடுத்துக் கொள்ளாத அளவு ரமழான் மாதத்தில் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். ரமழானில்  ஏனைய நாட்களில் சிரத்தை எடுத்துக் கொள்ளாத அளவு இறுதிப் பத்தில் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள்.” (ஸஹீஹு முஸ்லிம்)

ரமழானில் இறுதிப் பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது நடத்தையை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கீழ்வருமாறு விவரிக்கின்றார்கள்: ரமழானில் இறுதிப் பத்து வந்து விட்டால் தங்களது கீழாடையை இறுகக் கட்டிக் கொண்டு இரவை உயிர்ப்பிப்பார்கள். தங்களது மனைவிமாரையும் (வணக்க வழிபாடுகளுக்காக) தூக்கத்திலிருந்து விழித்துத் தொழச் செய்வார்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

எனவே, ரமழானின் வசந்தத்தில் திளைத்தெழ விரும்புகின்றவர் இபாதத்துக்கள் பற்றிய சட்டச் சர்ச்சைகளில் மூழ்குவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பில் அண்ணலாரிடத்தில் மேலெழுந்து நின்ற அதீத ஆர்வம் எம்மை இபாதத்தில் முழு விருப்பத்துடன்  ஈடுபட தூண்ட வேண்டும். இபாதத்துக்களின் புறத் தோற்றத்தை விட அதன் அகத் தோற்றமே ரமழானில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய வேண்டும். உபரியான தொழுகைகளின் ரக்அத்துக்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டுப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அண்ணலாரின் நீண்ட நெடிய அழகான ரக்அத்துக்கள் விலாசம் தெரியாத பிரமிப்பை எமக்குள் விதைக்க வேண்டும்.

அருள் மறையாம் திருமறையும் அண்ணலாரும்!

அருள் மறையாம் திருமறை அகிலத்தாருக்கு ஒரு பொதுமறை. அதனை வல்ல அல்லாஹ் இறுதி நபியின் உள்ளத்தில் இறக்கினான். ரூஹுல் அமீன் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இந்தக் குர்ஆனை உமது உள்ளத்தில் இறக்கினார்.” (அஷ்ஷூரா: 193) இது சிந்தனைக்கு விருந்தாக அமைகின்ற அறிவுக் கருவூலம் மட்டுமல்ல, முழு மனித சமுதாயத்தில் புரட்சிகர மாற்றங்களை தோற்றுவிக்க வந்த உன்னத வழிகாட்டி. இதனைப் படித்துப் பிரசாரம் செய்வதால் மனித உள்ளங்களில் தாக்கம் விளைவிக்க முடியாது. குர்ஆனியக் கொள்கைகளை உள்ளங்களில் சுமந்தவர்களே அடுத்த மனிதர்களின் இதயங்களில் ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும். இவ்வகையில் நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதத்தில் அதனுடன் ஆத்மார்த்த தொடர்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அவர்கள் அதனை தொழுகையிலேயே அதிகமாக பாராயணம் செய்தார்கள். சில மூத்த ஸஹாபாக்கள்கூட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பின்னால் நின்று தொழுவதில் அசௌகரியங்களை அனுபவித்தார்கள். ஏனெனில், அவர்களின் கிராஅத் மிகவும் நீளமாக அமைந்திருந்தது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் இரவு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் தொழுதேன். நான் ஒரு மோசமான விடயத்தை உள்ளத்தில் நாடுகின்ற அளவுக்கு அவர்கள் நீண்ட நேரம் தொழுகையில் நின்றார்கள். அப்படி என்ன மோசமான விடயத்தை நாடினீர்கள்?” என அவர்களிடம் வினவப்பட்டது. தொழுகையை (இடை நடுவில்) விட்டு அமர்ந்து விடுவதற்கு நாடினேன்” என அவர்கள் பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹு முஸ்லிம்)

ஹுதைபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் இரவு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் ஸூரா பகராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறாவது வசனம் முடிவில் ருகூஉ செய்வார்கள் என நினைத்தேன். அவர்கள் தொடர்ந்து ஓதினார்கள். ஸூரதுல் அல் பகராவை ஓதி முதல் ரகஅத்தை நிறைவு செய்து ருகுஉ செய்வார்கள் என நினைத்தேன். ஆனால், தொடர்ந்து ஓதினார்கள். பின்னர் (அதே ரகஅத்தில்) ஸூரா அந்நிஸாவை ஓத ஆரம்பித்தார்கள். அதை ஓதி முடித்து பின்னர் ஸூரா ஆல இம்ரான் எனும் அத்தியாயத்தை ஓத ஆரம்பித்து அதனையும் நிறைவு செய்தார்கள்.

மேற்படி ஸூராக்களை நின்று நிதானித்து ஓதினார்கள். தஸ்பீஹ் செய்து துதிக்க வேண்டிய வசனங்கள் வந்தால் தஸ்பீஹ் செய்வார்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கேட்க வேண்டிய வசனங்கள் வந்தால் அவர்கள் பிரார்த்தனை செய்து கேட்பார்கள். பாதுகாவல் தேட வேண்டிய வசனங்கள் வந்தால் பாதுகாவல் தேடுவார்கள். பின்னர் ருகூஉ செய்தார்கள். அந்த ருகூஉவில் ஸுப்ஹான ரப்பியல் அழீம்” என கூறினார்கள். அவர்கள் ருகூஉ சுமாராக அவர்களது கியாம் என்னும் நிலையில் நிற்றலுக்கு நிகராக இருந்தது. பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா லகல் ஹம்து” என்று கூறி நீண்ட நேரம் நின்றார்கள். அது சுமாராக ருகூஉவுக்கு நிகரானதாக இருந்தது. பின்னர் அவர்கள் ஹுஜூது செய்தார்கள். அதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா” எனக் கூறினார்கள். அவர்களது ஸுஜூது சுமாராக கியாம் எனும் நிலையில் நிற்றலுக்கு நிகரானதாக இருந்தது. (ஸஹீஹு முஸ்லிம்)

நாம் இங்கு பதிவு செய்த உபரியான தொழுகைகள் பற்றிய ஹதீஸ் நபிகளார் இறைவனுடன் ஏற்படுத்திக் கொண்ட அன்பின் ஆழத்தை எமக்கு அடையாளப்படுத்துகிறது. இது தொடர்பில் எமது உபரியான தொழுகைகளின் நிலைதான் என்ன? தொடர்ந்தும் சம்பிரதாய சகதிக்குள் மூழ்கி இபாதத் என்ற பெயரில் நிகழ்கின்ற அனைத்து பித்அத்துக்களையும் அள்ளிக்கட்டிக் கொண்டு ரமழானில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடப் போகின்றோமா? அல்லது இபாதத்துக்கள் குறித்த சட்டச் சர்ச்சைகளில் மூழ்கி உயிரோட்டம் இல்லாத அங்க அசைவுகளுடன் மட்டும் எமது இபாதத்துக்களை வரையறுத்துக் கொள்ளப் போகின்றோமா? இந்த சுயமதிப்பீடு ரமழானில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானிலும் ஏனைய காலங்களிலும் தொழுகையில் தான் ஓதுகின்ற திலாவத்தில் திளைத்திருந்ததுபோல பிறரின் திலாவத்தை செவிமடுத்து அல்குர்ஆனிய இசையால் ஆகர்ஷிக்கப்பட்டார்கள். அல்அஸ்ரிக் கோத்திரத்தாரது இல்லங்கள் அமைந்திருந்த பகுதிக்குச் சென்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அபூமூஸா அல்அஸ்அரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது திலாவத்தைக் கேட்டு மெய் மறந்து நின்றார்கள். அபூமூஸாவே! உங்களுக்கு தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த புல்லாங்குழலின் ஓசை போன்ற இனிய குரல் வளம் வழங்கப்பட்டுள்ளது” என நபிகளார் அந்த ஸஹாபியை சிலாகித்துப் பேசினார்கள். ரமழானில் நாம்  ஷைத்தானிய ஓலத்தைக் கேட்டு ரசிக்க செவிப்புலனைப் பயன்படுத்துவதை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ரமழானில் அல்குர்ஆனிய இசையால் எமது உள்ளங்கள் அசைக்கப்பட வேண்டும். சம்பிரதாய கத்முல் குர்ஆனுக்கு அப்பால் ஓர் அடி எடுத்து வைத்து திலாவத்தின் மூலம் பரவங் நிலைக்கு உள்ளாகின்ற கட்டத்தை நாம் எட்டிப் பிடிக்க வேண்டும்.

விழுமியம் சார் நடவடிக்கைகள்

ரமழான் ஓர் பயிற்சிப் பாசறை. அப்பாசறையில் பயிற்றப்பட்டு வெளியேறுகின்றவர்கள் வடித்தெடுக்கப்பட்ட குணசீலர்களாக சமூகத்தில் வாழ வேண்டும் என்பது மனிதருள் மாணிக்கம் மாநபியின் வேணவாவாகும். இவ்வகையில் அண்ணலார் ரமழான் மாத நோன்பை நற்பண்பாட்டோடும் ஒழுக்க விழுமியத்தோடும் தொடர்புபடுத்திப் பேசினார்கள். நோன்பின் இறுதி இலக்கு தக்வா”  என்று அல்குர்ஆன் குறிப்பிடுவதற்கு ஒரு விரிவுரையாக நபிகளாரின் வாக்கு அமைந்திருந்தது. நபி (ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ் கூறுகின்றான்: ஒவ்வொரு மனிதனும் நிறைவேற்றுகின்ற நற்செயல்களுக்குரிய நற்கூலி அவனுக்கே உரியதாகும். நோன்பைத் தவிர. நோன்பு எனக்காக நோற்கப்படுவதாகும். அதற்குரிய பிரத்தியேக கூலியை நானே வழங்குகின்றேன். நோன்பு ஒரு கேடயமாகும். எனவே, உங்ளில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் தன் மனைவியுடன் யாராவது தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டாம். சப்தமிட்டுப் பேச வேணடாம். தன்னை யாராவது ஏசினால் அல்லது தன்னுடன் சண்டைக்கு வந்தால் ‘நான் நோன்பாளி’ என (மனதுக்குள்) சொல்லட்டும்.” (அல்புகாரி, அல்முஸ்லிம்)

இறைதூதரின் பார்வையில் ரமழான் மாத நோன்பு என்பது பண்புகளைப் பண்படுத்தி நெறிப்படுத்துகின்ற உன்னத சாதனமாகும். எமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் நோன்பு சுத்திகரிக்க வேண்டும். பொய், புறம், கோள், அவதூறு இழிகுணங்களை கடிவாளம் இட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற கருவியே நோன்பு. பகைமை, குரோதம், காழ்ப்புணர்வு, பழிதீர்க்கும் மனப்பான்மை முதலான ஷைத்தானிய வேட்டுக்களிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்ற கேடயமே நோன்பு. விழுமியம் சார் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்காத நோன்பு உண்மையில் நோன்பல்ல. அந்த நோன்புக்கும் அல்லாஹ்வுக்கும் எத்தகைய சம்பந்தமும் கிடையாது.  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: பொய்யுரைத்து அதன் அடிப்படையில் செயற்படுவதை விட்டு விடாதவர் உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தவொரு தேவையுமில்லை.” (ஸஹீஹுல் புகாரி)

நோன்பு ஒரு மனிதனின் கற்பொழுக்கத்தைப் பாதுகாக்கின்ற அரண். இதனை நபி (ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம்) அவர்கள் கீழ்வருமாறு தெளிவுபடுத்தினார்கள்: இளைஞர்களே! உங்களில் யாருக்கு வலிமை இருக்குமோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். திருமணம் என்பது பார்வையை ஹராத்திலிருந்து பாதுகாக்க வல்லது. கற்பைப் பாதுகாக்கும் அரண். திருமணம் செய்து கொள்ள வலிமை பெறாதவர் நோன்பு நோற்கட்டும். அந்த நோன்பு கீழ்த்தரமான உணர்வுகளிலிருந்து பாதுகாக்கக் கூடிய கடிவாளம்.” (ஸஹீஹுல் புகாரி)

இறைதூதரும் மனித நேய சிந்தனையும்

இறைதூதரின் ரமழான் கால செயற்பாடுகள் மனிதர்களுடனான அனைத்து உறவுகளையும் வேரறுத்துக் கொண்டதாக அமையவில்லை. ரமழானில் அவர்களது மனித நேய சிந்தனை உச்ச நிலையில் காணப்பட்டது. இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம்) அவர்கள் மனிதர்களில் வாரி வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள். ரமழானில் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபியவர்களை சந்திக்கும் வேளை பெரும் வள்ளலாகத் திகழ்வார்கள். ஒவ்வோர் இரவிலும் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபிகளாரைச் சந்தித்து அல்குர்ஆனை அவர்களுக்கு பாராயணம் செய்யும்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் படுவேகமாக வீசுகின்ற காற்றைவிட வேகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

உத்தம நபிகளார் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைச் சந்திப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைவார்கள். வானவர் கோன் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைச் சந்திப்பதை விட பாக்கியமிக்க நிகழ்வு ஒன்று அவர்களுக்கு இருக்க முடியுமா? அந்த நிகழ்வு ஏழைகளின் முகம் பார்ப்பதை விட்டும் நபிகளாரைத் திசை திருப்பி விடவில்லை. நபிப் பட்டம் கிடைக்கப் பெறுவதற்கு முன்னர் இறைவனின் பயிற்றுவிப்பு அவ்வாறு இருந்தது. அதாவது இஸ்லாமும் அனாதரவாகவே தோன்றியது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் தாய் தந்தையினரை இழந்து அநாதரவாகவே வளர்ந்தார்கள். அப்பொழுதெல்லாம் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னை அரவணைத்து ஆறுதலளிக்கும் கரத்தை எதிர்பார்த்து ஏக்கப் பெருமூச்சுடன் வாழ்ந்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் இறைவன் வஹியை வர்ஷித்து நொந்துபோன உள்ளத்திற்கு ஆறுதலளித்தான். வகையற்றவர்களை அரவணைக்குமாறு நபியவர்களுக்கு கட்டளையிட்டான்:

உம்மை அநாதையாகக் கண்ட அவன் அடைக்கலம் தரவில்லையா? வழிகாட்டத் தெரியாத நிலையில் உம்மைக் கண்ட அவன் உமக்கு வழிகாட்டினான். உம்மை ஏழையாக கண்ட அவன் தன்னிறைவான வாழ்க்கையைத் தரவில்லையா? ஆகவே, அநாதைகளை அடக்கி ஆளாதீர்கள்! கை நீட்டி யாசிப்போரை விரட்டி விடாதீர்.” (ஸூரா ழுஹா- 6-10)

எனவே, மனித நேயம் ஒட்டிப் பிறந்த குழந்தையாய் அவர்களிடம் வளர்ந்து வந்தது. அது ரமழானில் அவர்களது நடைமுறை வாழ்வில் பிரத்தியட்சமாகப் பிரதிபலித்தது. அல்லாஹுத் தஆலா ஏழைகளின் முகம் பார்க்காமல் தனது திருமுகத்தை நாடி நிற்க விரும்புவோரை பார்ப்பதில்லை. உலக வாழ்வு, ஆன்மிக வாழ்வு என வாழ்க்கையைக் கூறுபோட்டு இருட்டறையில் குருட்டுத் தியானம் புரிவோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. புனித ரமழானில் சமூக அவலங்களை நீக்க அதனது பகற்பொழுதுகளில் குதிரை வீரர்களாக நின்று போராடி அதனால் இராக் காலங்களில் துறவிகளாக மாறி விடுகின்றவர்களின் மீது அல்லாஹ்வின் அருட்கடாட்சம் பொழிகின்றது.

ஆரோக்கிய வாழ்வு

ரமழான் மாதம் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கின்றது. ரமழான் மாத நோன்பு மனித சிந்தனையையும் ஆன்மாவையும் நெறிப்படுத்துவதுபோல உடல் ஆரோக்கியத்தையும் கட்டி எழுப்புகின்றது. இது தொடர்பில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது வழிகாட்டல் இவ்வாறு அமைகின்றது. நோன்பு நோற்று ஆரோக்கியம் பெறுவீர்கள்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழான் மாத ஸஹர் வேளை உணவையும் இப்தார் வேளை உணவையும் உடலுக்கு கனதியில்லாத வகையில் அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்களது உணவு பேரீத்தம் பழமும் நீராகாரமுமாகும். ங்கல வகையான நோயின் உறைவிடம் வயிறு என்பது நபிகளாரின் கருத்தாகும். எனவே, உணவுக் கட்டுப்பாடு குறித்து அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்: ஒரு மனிதன் வயிற்றைவிட மோசமானதொரு பாத்திரத்தை நிரப்பிக் கொள்வதில்லை. ஒரு மனிதனது முதுகெலும்பை நிமிர்திவிடக் கூடிய சில கவளம் உணவு அவனுக்கு போதுமானது. அதனைவிட அதிகம் உண்ண வேண்டிய கட்டாயத் தேவை இருந்தால் அவனது வயிற்றின் மூன்றில் ஒன்றை உணவுக்காகவும் அடுத்த மூன்றில் ஒன்றை நீருக்காகவும் இன்னும் மூன்றில் ஒன்றை மூச்சு விடுவதற்காகவும் வரையறுத்துக் கொள்ளவும்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

மனிதன் எப்போதும் ஆரோக்கியமானவனாக வாழ்வதற்கு இளம் பசி ஒன்று அவனிடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும். புதுப் புது நோய்களினால் அவதியுறுகின்ற எமது சமுதாயம் நபிகளாரின் உணவுக் கட்டுப்பாட்டு முறையை கடைப்பிடித்தொழுகினால் மருந்து வகைகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட முடியும். ரமழான் மாதம் இதற்கான அரியதொரு சந்தர்ப்பமாகும். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரமழான் கால உணவு வகைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட உறுதி கொள்ள வேண்டும்.

ரமழான் மாதத்தை நபிகளார் எவ்வாறு பயன்படுத்தினார்கள், அவர்களது வழிகாட்டல்கள் எவ்வாறு அமைந்தன? போன்ற விளக்கங்களை நாம் இங்கு பதிவு செய்தோம். இதனை ரமழானில் அமுலுக்குக் கொண்டு வருகின்றபோது மட்டுமே ரமழான் அருள் வாயில்கள் திறக்கப்பட்டு நரக வாயில்கள் இறுக மூடப்பட்டு ஷைத்தான் விலங்கிடப்பட்ட வசந்த காலமாக அமையும். அவ்வாறு இல்லையெனில், ரமழான் சுவன வாயில்கள் திறக்கப்படும் மாதம் என்பது ஒரு கருத்தாக மட்டுமே இருக்கும்.

எனவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது ரமழானிய வழிகாட்டல்களை படித்துணர்ந்து செயற்பட்டு மறுமை நாளில் ரய்யான்” எனும் சுவன வாயிலின் ஊடாக சுவனத் தாயகத்தில் தடம் பதிக்க முயற்சிப்போமாக!

 

 

ஏடிஞ்டடூடிஞ்டணா

இறைதூதரின் பார்வையில் ரமழான் மாத நோன்பு என்பது பண்புகளைப் பண்படுத்தி நெறிப்படுத்துகின்ற உன்னத சாதனமாகும். எமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் நோன்பு சுத்திகரிக்க வேண்டும். பொய், புறம், கோள், அவதூறு இழிகுணங்களை கடிவாளம் இட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற கருவியே நோன்பு. பகைமை, குரோதம், காழ்ப்புணர்வு, பழிதீர்க்கும் மனப்பான்மை முதலான ஷைத்தானிய வேட்டுக்களிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்ற கேடயமே நோன்பு. விழுமியம் சார் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்காத நோன்பு உண்மையில் நோன்பல்ல. அந்த நோன்புக்கும் அல்லாஹ்வுக்கும் எத்தகைய சம்பந்தமும் கிடையாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *